Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.

சுற்றிச் சென்றும் காத்துவாங்கிய சிறப்பு ரயில்

Tamil Nadu Railfans Association
Sep 26, 2017
போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்துக்கு மாறாக, கோவையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாலக்காடு வழியாக சுற்றி இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், 50 சதவீதம்பேர் கூட பயணிக்கவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் ஓரவஞ்சனையால் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கப்பட்டு வருகிறது.போத்தனுார் - பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., அகல ரயில் பாதை பணிகள், 349 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட, கோவை - துாத்துக்குடி, கோவை - ராமேஸ்வரம் போன்ற ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது, கோவை - பொள்ளாச்சி இடையே யாருக்கும் பயன்படாத நேரத்தில் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை காலை, மாலை போன்ற, 'பீக்' நேரங்களில் இயக்க வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், ரயில்வே நிர்வாகம் செவிசாய்த்த பாடில்லை.எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கோவையிலிருந்து, பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது; மறுகணமே பயணிகளிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டது.அதன் பிரதிபலிப்பாக, கோவையிலிருந்து கடந்த, 17 மற்றும், 24ம் தேதி மாலை, 6:30 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயிலில், 50 சதவீத பயணிகள் கூட பயணிக்கவில்லை என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவையிலிருந்து கடந்த, 17ம் தேதி இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், மொத்தம் உள்ள, 530 இடங்களில், ஸ்லீப்பர் வகுப்பு, 'ஏசி' வகுப்பு, முன்பதிவற்ற வகுப்பில் என, மொத்தமாகவே, 198 பேர்தான் பயணித்துள்ளர்; 24ம் தேதி, 217 பேர் தான் பயணித்துள்ளனர்.அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கோவைக்கு இயக்கப்பட்ட ரயிலில், 338 ஸ்லீப்பர் வகுப்புகள், 21 'ஏசி' வகுப்புகள் காலியாக இருந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியூர்களில் இருந்தே கோவைக்கு அதிகமானோர் பயணிப்பர். பாலக்காடு வழியாக சுற்றி இயக்கப்பட்டதும் பயணிகள் குறைவுக்கு காரணம் என நினைக்கிறோம். இவ்வாறு, அதிகாரி கூறினார். காரணம் இதுதான்!கோவையிலிருந்து மாலை, 6:30க்கு புறப்பட்ட சிறப்பு ரயில், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் காலை, 4:00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தது. இதே ரயில், போத்தனுார், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டிருந்தால் இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே ராமேஸ்வரம் சென்றடையும். நேர விரையமே பயணிகளின் எண்ணிக்கை குறைய காரணம்.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X