Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Tamil Nadu Railfans Association
Sep 7, 2017
கோவையில் இருந்து பொள்ளாச்சி அகல ரயில்பாதை வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கோவை பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணி ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அண்மையில் நிறைவுபெற்றது. பெரும் நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கோவை மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் எனும் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மீட்டர்கேஜ் ரயில் பாதையில் மதுரை, தூத்துக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதனால் கோவையில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து எளிதாக இருந்து வந்தது. இந்நிலையில், அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருகிறது. எனவே, கோவையில் இருந்து பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் முத்துசாமி, நாச்சிமுத்து, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சுசி கலையரசன், ஆதித்தமிழர் கட்சி
நிர்வாகி வெண்மணி மற்றும் காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X