

TNPSC Group 1 தேர்வு சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கை மனு.
நாள்: 26 / 04 / 2024
பெறுநர்,
உயர்திரு டிஎன்பிஎஸ்சி செயலாளர் அவர்கள்,
டிஎன்பிஎஸ்சி சாலை, V.O C நகர்,
பார்க் டவுன், சென்னை- 600 003.
பொருள்:
TNPSC குரூப் 1 தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக.
அய்யா,
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்பது எனது குழந்தை பருவ லட்சியமாகும்.
ஏப்ரல் 2018 -2024 ஏப்ரல் வரை ஆறு ஆண்டு கால கட்டத்தில் மூன்று முறை மட்டுமே குரூப் 1 தேர்வு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் 13 முறை மட்டுமே குரூப் 1 தேர்வு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் 1 தேர்வு சரியான கால இடைவெளியில் நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது.
“தேர்வு எழுதி தோல்வியடைவது என்பது வேறு… தேர்வில் கலந்து கொள்ளாமலேயே வெளியேற்றப்படுவது நியாயமா?”
பல போட்டி தேர்வர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பினை இழந்து தற்போது உள்ள தேர்வு நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பும் பலர் காற்றோடு காற்றாக காணாமல் போய்விடுகிறார்கள். இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.
இந்த தேசம் சிறந்த மனித வளத்தை சரியாக பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்படுகிறது தற்பொழுது Tnpsc குரூப் 1 தேர்வு நடைமுறை காரணமாக.
உறுதிப்பற்றுடன் இருக்கும் மனித வளத்தை பயன்படுத்தி வேண்டியது நாட்டின் கடமையாகும். வயது கூடும் போது ஒரு மனிதனின் பக்குவ நிலை மேம்படுகிறது குறிப்பாக ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் தன்மை, பொறுமை, பொறுப்புணர்வு கூடும். இத்தகைய மனித வளம் நிர்வாக பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடிய பண்புகள் ஆகும். ஆகையால்
1. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிறந்த மனித வளத்தை சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்வு செய்யும் போது தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் குரூப் 1 தேர்வு வயது வரம்பினை உயர்த்தி உள்ளன.
குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு:
மாநிலம் -
பொது பிரிவினருக்கான வயதுவரம்பு
(இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயதுவரம்பு)
1.தெலுங்கானா - 46 ( 51 )
2. ஆந்திர பிரதேசம் - 42 ( 47 )
3. உத்தரகாண்ட் - 42 ( 47 )
4. ஹரியானா - 42 ( 47 )
5. உத்தரப்பிரதேசம் - 40 ( 45 )
6. மத்திய பிரதேசம் - 40 ( 45 )
7. ராஜஸ்தான். - 40 ( 45 )
8. அசாம். - 38 ( 43 )
9. மகாராஷ்டிரா - 38 ( 43 )
10. சத்தீஸ்கர் - 38 ( 43 )
11. பஞ்சாப் - 37 ( 42 )
மேலே உள்ள அட்டவணை கவனித்தால் புரியும் பல மாநிலங்களும் சிறந்த மனித வளத்தை பெறுவதற்கு வயதினை ஒரு தடையாக கருதவில்லை என்பது. ஆகையால் தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்களும் சிறந்த மனித வளத்தை பெற வேண்டும். ஆகையால்
2. குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவதற்கு ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கவனத்திற்கு டிஎன்பிஎஸ்சி யின் சார்பாக எங்களுடைய இந்த கோரிக்கைகளை பரிந்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடைக்கால தீர்வாக-
3. 49 வயது வரை குரூப் 1 தேர்வினை ஒருமுறை எழுதுவதற்கு வாய்ப்பினை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
“I Have Only One Religion That Is To Serve The Country” - Bagat Singh
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பா. சுரேஷ் குமார்.
பெரம்பலூர் மாவட்டம்.