இராஜ் வீரரத்னவின் "Legends are back: Australia Tour" என்ற இசைக்கச்சேரியைத் தடைசெய்யுமாறு கோரிக்கை
பாடகரும் அரசியல் செயற்பாட்டாளருமான இராஜ் வீரரத்ன பங்கேற்கும் “Legends are back: Australia Tour" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி தொடர்பாக உங்களின் உடனடி கவனத்தையும் நடவடிக்கையையும் வேண்டி, கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் இந்த மனுவை பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம். இந்த நிகழ்வு அவுஸ்திரேலியா எப்போதும் பேணிப்பாதுகாக்கும் நல்லிணக்கம், அமைதி, பன்முகத்தன்மை மற்றும் பன்முகக்கலாசாரம் ஆகியவற்றுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
நீண்டகாலமாக பன்முகக்கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் கோட்டையாக அவுஸ்திரேலியா கருதப்படுகிறது. பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பல சந்தர்ப்பங்களில், "பன்முகத்தன்மையே வலிமை, சகிப்புத்தன்மை இயற்கையானது" என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் பின்புலத்தில்தான் இராஜ் வீரரத்ன இந்த இசைக்கச்சேரியில் பங்கேற்பது குறித்து எமது மனவருத்தத்தைத் தெரிவிக்கின்றோம்.
இராஜ் வீரரத்ன தனது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் YouTube காணொளிகள் ஊடாக இனவாத, இனத் தேசியவாத கருத்துக்களை ஆதரிப்பதோடு வெறுப்புணர்வை ஊக்குவிப்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். அவரது இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அரசியல்-உந்துதல் கொண்ட சொல்லாடல்கள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உள்ளடங்கல் ஆகியவற்றின் பெறுதிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பல்லின சமூகங்களிடையே வெறுப்பின் விதைகளைத் தூவும் ஆபத்தையும் கொண்டுள்ளது.
மேலும், இலங்கையில் இனவாத அரசியல் திட்டங்களுக்கு உதவுவதில் வீரரத்ன தீவிரமாக பங்கேற்பது, குறிப்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இருப்பது போன்ற செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க கவலைகளை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தை நோக்கிய ராஜபக்சேவின் எழுச்சி வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரத்தால் தூண்டப்பட்டது, இது ஆழமான சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி இறுதியில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இந்த பிரச்சாரத்தைக் கொண்டு சென்றதில் வீரரத்னவின் தீவிர ஈடுபாடு மற்றும் ராஜபக்சேவுக்கு சாதகமான பிம்பத்தை உருவாக்குவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்பன, நாம் விரும்புகின்ற கொள்கைகளுக்கு முரணான பிளவுபடுத்தும் சித்தாந்தங்களுடன் அவர் இணைந்திருப்பதை நிரூபிக்கிறது.
அவரது அரசியல் கொள்கைகளுக்கு மேலதிகமாக, LGBTQIA சமூகத்திற்கு எதிராக வெறுப்பு மற்றும் பாகுபடுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அவர் செயற்பட்டு வந்துள்ளார்.
பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற அவரது "Mathinta (Api UNP)" பாடல், LGBTQIA எதிர்ப்பு உணர்வுகளை நிலைநிறுத்தும் பாடல் வரிகள் மற்றும் படங்களைக் கொண்டுள்ளது. திருநங்கை சமூகங்கள் குரோதம் மற்றும் வன்முறையை எதிர்கொண்ட ஒரு தருணத்தில், இத்தகைய சொல்லாடல்கள் பிரபலப்படுத்தப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியது என்பதுடன் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தனிநபர்களுக்கு மேலும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இலங்கைச் சமூகத்தவர்களிடையே கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள #BoycottIraj என்ற சமூக ஊடகப் போராட்டத்தையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இந்த Hashtag இன் பரவலான பயன்படுத்துகை மற்றும் அதனுடன் இணைந்த பதிவுகள், இராஜ் வீரரத்னவின் Legends are Back: Australia Tour-க்கு எதிரான பலத்த எதிர்ப்பிற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.
இந்த இசைக்கச்சேரி நிகழ்வதனால் ஏற்படக்கூடிய தீயவிளைவுகளை எடுத்து நோக்குகையில், அதனைத் தொடரஅனுமதிப்பதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வீரரத்ன போன்ற ஒருவரை அவுஸ்திரேலியாவில் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதன் மூலம் பன்முகத்தன்மை மற்றும் பல்கலாச்சாரத்துவக் கொள்கைகள் குறைத்து மதிப்பிடப்படுவதுடன் இந்த தேசத்தில் வசிக்கும் சமூகங்களுக்கிடையில் வெறுப்பும் பிரிவினையையும் தூவப்படும் ஆபத்தும் ஏற்படலாம்.
எனவே, குறித்த இசைக் கச்சேரியைத் தடைசெய்ய எமது முழு ஆதரவையும் தெரிவித்துக் கையொப்பமிடுவதுடன், அவுஸ்திரேலியாவில் இது போன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறோம்.
அவுஸ்திரேலியா பெருமையுடன் கொள்ளும் கொள்கைகளுக்கு எதிரான கருத்தியல்களை பரப்புவதற்கான ஒருதளத்தை அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை கவனமாகப் பரிசீலிக்குமாறு நாங்கள் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் தாங்கள் எங்கள் கவலைகளை நிவர்த்திசெய்ய சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றும் உறுதியாக நம்புகிறோம். தங்கள் செயற்பாடுகளின் மூலமும், பன்முகத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பின் காரணமாகவும் நீதி நிலைநாட்டப்படும் என்ற
நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.