Need changes in School Timings - பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் வேண்டும்

0 have signed. Let’s get to 1,000!


பெறுநர்,

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
பள்ளிக் கல்வித் துறை ,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம்,
சென்னை – 600009.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு,

பொருள் : பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் மற்றும் மாணவர்களின் அத்தியாவசியத்  தேவைகளை வலியுறுத்துதல் தொடர்பாக.

ஐயா, தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகள் காலை 9 மணிக்கு முன்பாகவே துவங்கிவிடுகின்றன. பல பள்ளிகள் காலை 8 மணிக்கும் முன்பே துவங்கிவிடுகின்றன. இதனால், குழந்தைகளை அதிகாலையிலேயே எழுப்பி, தயார்படுத்தி, 6 அல்லது 7 மணிக்கு பள்ளி பேருந்தில் அனுப்பி வைக்க வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உறங்குவது தான் குழந்தைகளின் நலனுக்கு உகந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பள்ளியில் இருந்து வந்து வீட்டுப்பாடங்கள் முடித்து, இரவு உணவு முடித்து 10 மணிக்கும் மேல் தான் குழந்தைகள் உறங்கச் செல்கின்றனர். இந்நிலையில் குழந்தைகளை அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு எழுப்பி 7 அல்லது 8 மணிக்கு பேருந்தில் ஏற்றிவிடவது, குழந்தைகளின் உடல் நலனை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக, குளிர் காலங்களில், குழந்தைகளுக்கு இது பெரும் துன்பமாகவே அமைகிறது.

சென்னை போன்ற பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 9 மணிக்கும் முன்பு பள்ளிகள் துவங்குகின்றன. இதை மற்ற பகுதிகளிலும் அமல்படுத்துவது குழந்தைகளுக்கு செய்யும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து குழந்தைகளின் உடல் நலனையும் எதிர்காலத்தையும் காக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

கோரிக்கைகள்:-

  • போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை மாநகரம் தவிர்த்த பிற பகுதிகளில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிளும் காலை 9 மணிக்கு வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும்.
  • KG பிரிவுக் குழந்தைகளுக்கு காலை 9 மணி முதல் பகல் 12 வரை மட்டுமே மற்றும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பயிலும் நேரமாக இருப்பதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.
  • மழை, கடுமையான வெயில் போன்ற சூழல் தவிர மற்ற நேரங்களில் விளையாட்டு நேரத்தில் விளையாட்டு மைதானத்திலும், இயற்கை சீற்றங்களின் போது உள்ளரங்கிலும் விளையாட அனுமதிக்க வேண்டும். பாடம் நடத்தக் கூடாது.
  • அனைத்துப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
  • பணிக்கு செல்லும் பெற்றோர்கள் 9 மணிக்கு முன்பே குழந்தைகளை பள்ளியில் விட விரும்பினால், அதற்கான அனுமதி அளிக்க வேண்டும்.

குழந்தைகளின் நலனை மனதில் வைத்து வலியுறுத்தும் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 தங்கள் உண்மையுள்ள,

M. சஞ்சய் காந்தி,
கோயம்புத்தூர்.



Today: Sanjai is counting on you

Sanjai Gandhi needs your help with “Thiru Sengottaiyan K.A: பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் வேண்டும்”. Join Sanjai and 588 supporters today.