Stop spreading hatred against Muslims in Tamilnadu

0 have signed. Let’s get to 5,000!


மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
வணக்கம்.

கொரோனா வைரஸ் நாடெங்கும் பரவத் துவங்கியிருக்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். 21 நாள் ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது.

இப்போது ஏற்பட்டிருக்கிற தொற்றுகளுக்கு தில்லியில் நடத்தப்பட்ட தப்லிக் ஜமாத் கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்றதும், அவர்களிடமிருந்து தொற்று பரவியதும் முதன்மைக் காரணமாக உள்ளது. இந்தத் தொற்றுகளால் பெரிய அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் தொற்று பரவியது உண்மைதான். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 1500 பேரில் 1480 பேரும் பரிசோதனக்கு வந்து விட்டார்கள் என்று தமிழக அரசின் சுகாதாரச் செயலர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் இது இஸ்லாமியருக்கு எதிரான மதவெறுப்புப் பிரச்சாரமாக மாற்றப்பட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு மதச்சாயம் பூசப்படுகிறது. இதன் விளைவுகள் கடுமையாக வெளிப்பட்டு வருகின்றன.

சில இடங்களில், இஸ்லாமியர் கடைகளில் வாங்காதீர்கள் என்ற வெறுப்புப் பிரச்சாரம் நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமியரைக் கண்டாலே ஒதுங்கிப் போவது, வரிசையில் நிற்பவர்களை கடைசியாக நிற்குமாறு சொல்வது போன்ற தீண்டாமை வழக்ககங்கள் புதிதாகப் பிறந்திருக்கின்றன. எந்தச் செய்திகளையும் உண்மைத்தன்மை சரிபார்க்காமல் வாட்ஸ்அப் போன்றவற்றில் அப்படியே பரப்பிவிடும் பொறுப்பற்ற செயல்களால், இதுபோன்ற மதவெறுப்புப் பிரச்சாரங்கள் தீயாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

இத்தாலிக்குச் சென்று திரும்பிய சீக்கிய மதகுரு ஒருவரால் பஞ்சாபில் கொரோனா பரவியது. ஆனால் சீக்கியர்களின் காரணமாகப் பரவியது என்று யாரும் சொல்லவில்லை. இத்தாலியில் கிறித்துவ தேவாலயங்களின் வாயிலாகப் பரவியதால் தேவாலயங்கள் மூடப்பட்டன. ஆயினும் கிறித்துவர்களால் பரவியது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் நோயிலும்கூட மத அரசியல் தலைவிரித்தாடுகிறது. ஏதோ இஸ்லாமியர்களால்தான் பரவியது, அதுவும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்பது போன்ற மோசமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

கொரோனா விஷயத்தில் ஒரு மதத்தினரைக் குற்றம் சாட்டிப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் மாண்புமிகு எடியூரப்பா கடுமையாக எச்சரித்திருக்கிறார். தெலங்கானா முதல்வர், இதனை மதரீதியாகப் பார்கக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். கேரள முதல்வரும் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார்.

தமிழ்நாடு எப்போதும் மதநல்லிணக்கத்தின் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தினரும் சகோதர உணர்வுடன் பழகும் பாங்கினை வேறெந்த மாநிலத்தைவிட தமிழ்நாட்டில்தான் காண முடியும். அப்படியிருக்கையில், அரசியல் காரணங்களுக்காக வதந்திகளையும் பொய்களையும் பரப்பும் மிகச்சிலரால் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து வந்து விடாமல் காப்பது நம் அனைவரின் கடமையாகிறது.

ஆயினும், ஊரடங்கு நேரத்தில், மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் தனிநபர்களால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியாது. இதனை அரசாங்கம்தான் செய்ய முடியும்.

எனவே, நோய்த் தொற்றுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. நாம் போராட வேண்டியது நோய்க்கு எதிராகத்தானே தவிர நோய்க்கு ஆளானவர்களுக்கு எதிராக அல்ல, ஏதேனும் ஒரு மதத்தினருக்கு எதிராக அல்ல. நாம் எல்லாரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டால்தான் இந்தக் கொடிய நோயிலிருந்து தப்பிக்க முடியும். என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலும், பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கவும் முதல்வராகிய தாங்கள் ஓர் அறிக்கை வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன. முதல்வரின் சொல்லுக்கு மக்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். சோதனையான இச்சூழலில் முதல்வர் தலையிட்டு வதந்திகளை நிறுத்தச் செய்வது மட்டுமே தமிழ்நாட்டில் எப்போதும் சமூக நல்லிணக்கம் நிலைபெறச் செய்யும்

ஆகவே, முதல்வர் அவர்கள் இதுகுறித்து தீவிரமாக சிந்தித்து மதவெறுப்புப் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.